கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தக் குடி
நம் தமிழ்க் குடி
இவை வெறும் வார்த்தைகளல்ல. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற மொழியின் சிறப்பையும் இனத்தின் தொன்மையையும் உலகிற்கு எடுத்துக் கூறும் ஆதாரம்.
சேர, சோழ பாண்டிய மன்னர்களின் காலத்தில் உலகின் மாபெரும் வல்லரசாக இருந்தும்கூட யாரையுமே அடிமைப்படுத்தாமல் பிறரை வாழ வைத்து விளங்கிய தமிழ் இனம் இன்று தனது சொந்த மண்ணிலேயே வாழ்விழந்து போகச் செய்துவிட சதி நடக்கிறது. சாதியால், மதத்தால், அரசியலால் தன் பொலிவை இழந்து நிற்கிறது. தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களே அதற்கு துணை போவது வருந்தத்தக்கது. ஒரு மனிதனால் சாதியின்றி வாழ்ந்திட இயலும். மதம் இன்றி மகத்துவமாய் வாழ்ந்திட இயலும். ஆனால் மொழியின்றி எவரேனும் வாழ்ந்ததுண்டா ?
மொழி ஒரு தொடர்புக் கருவி மட்டுமே என அதனை அலட்சியப் படுத்த வேண்டாம். மிருகம் முதல் மனிதன் வரை மொழியின்றி வாழ்வது கடினம். மழலைக்கும் தாய்க்கும் உள்ள அன்பும் ஒரு மொழி தான் நண்பர்களே... பேச இயலாதவர்களும் அடுத்தவரை தொடர்பு கொள்ள ஒரு மௌன மொழியை நாடியாக வேண்டும். இந்த உலகில் வாழ்ந்து மடியும் வரை நமக்கும், மடிந்த பின்னர் நம் சங்கதியினருக்கும் தொடர்ந்து உதவிவரும் மொழிக்கு நாம் நன்றி செலுத்துவது நம் கடமையல்லவா ? அதுமட்டுமல்ல தோழர்களே ஒவ்வொரு தேசிய இனங்களின் அடையாளமும் வேரும் மொழியிலிருந்து தான் பிறக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
ஒரு தேசிய இனம் என்பது தனக்கானதொரு மொழி, வரலாற்று தொன்மை மிக்க சிறப்பியல்புகள் கொண்ட பண்பாடு போன்றவற்றைக் கொண்டு தனித்து இயங்கும் வல்லமையும் பெற்ற இனமாகும். அப்படி பார்த்தால் தமிழர்கள், மலையாளிகள் மற்றும் இதே போன்ற இயல்புள்ள மற்ற இனங்களும் தேசிய இனங்களாகும்.
மனிதர்களை இனங்களாக பிரித்துப் பார்க்க வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு ஒர் அறிவிப்பு. நாம் இன்னும் இந்தியாவில் தான் இருக்கிறோம். நம் தமிழ் மண்ணைச் சுரண்டி நெய்வேலி நிலக்கரியிலிருந்து மத்திய அரசு அண்டை மாநிலங்களுக்கு மின்சாரத்தை வாரி வழங்கும் போது மட்டும் நாம் இந்தியர்களாக தெரிவோம். ஆனால் 'கொடு என்றாலும் கொடுக்க மாட்டேன்' என தண்ணீர் வழங்க மறுக்கும் போது மட்டும் நாமும் இந்தியர்கள் என அவர்களுக்கு மறந்து விடுகிறது. மறக்கப்படுகிறது. காரணம் அவர்கள் இனரீதியாக ஒற்றுமையாக
முடிவெடுக்கிறார்கள். ஆனால் நாம் தான் இன்னமும் 'நாம் இந்தியர்' என கூறிக் கொள்கிறோம்.
இந்திரா காந்தி அம்மையார் மறைந்ததை கேட்டு 17 தமிழர்கள் தற்கொலையுண்டனர். ஒருவர் மலேசியா நாட்டில் தற்கொலை செய்த கொண்டார். அவரும் தமிழரே. இன்னொருவர் ஒரிசா மாநிலத்தில் தற்கொலையுண்டார். விசாரித்து பார்த்ததில் அவரும் தமிழரே... இந்திரா காந்தி அவர்களின் பிறந்த மண்ணிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியிலும் கூட இப்படி நடக்கவில்லை. தமிழர்கள் எந்த அளவிற்கு உணர்ச்சிகரமானவர்கள் என்பதற்க இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நமக்கு மட்டும் தான் இந்தியாவிலேயே இந்திய தேசிய பாசம். இனப்பிரிவினை வாதம் என்று பேசுபவர்கள் தயவு செய்த மற்ற மாநிலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முயலவும்.
நாம் இந்தியர் தான்.. இந்தியாவில் வசிப்பதினால் மட்டுமே....
இது குறித்த பல சிந்தனைகளைக் கொண்ட 'தமிழ் தேசியம்' என்ற கட்டுரையை இந்த இணைய இதழின் முதல் வெளியீட்டில் வெளியிட்டு மகிழ்கிறோம். இக்கட்டுரையாளரும் தமிழ் தேசியத்திற்காக நீண்ட காலம் போராடி வருபவரும், தமிழர் கண்ணோட்டம் என்னும் தமிழ் தேசிய மாத இதழின் ஆசிரியருமான திரு.பெ.மணியரசன் அவர்கள் தக்க விளக்கங்களுடன் அதனை விளக்கியுள்ளார். அன்பர்கள் படித்து தெளிவு பெறவும். படித்த நண்பர்கள் பின்னூட்டங்கள் அளித்து விவாதங்கள் நடத்த முன்வர வேண்டும். இன்றைய தமிழ் சமுதாயத்தில் விவாதங்களுக்கு வர வேண்டிய பல விடயங்களில் இது மிக முதன்மையானது.
தமிழர் திருநாளன்று இந்த இணைதளம் தொடங்கப் படுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மின்னஞ்சலில் செய்திகள் மற்றும் விமர்சனங்கள் அனுப்ப விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொண்டு நீங்களும் இம்மாத இதழின் செய்தியாளராக இருக்குமிடத்திலிருந்தே பணியாற்றலாம்.....
நம் தாய் மொழி இந்தியல்ல. தமிழ். நம் பண்பாடு வடவர் பண்பாடல்ல. தமிழ் பண்பாடு. ஆகையால் நாம் தமிழர் என்கிற உணர்வு மேலோங்க வேண்டும் என்று கூறி இந்த இதழின் முதல் பதிவை சமர்ப்பிக்கிறோம்....
அடுப்புத் தீயில் பொங்கல் பொங்கட்டும்
மனத்தீயில் தமிழ் தேசிய உணர்வு பொங்கட்டும்...
வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் தேசியம்!
தோழமையுடன்
க.அருணபாரதி
பொறுப்பாசிரியர்